13 Mar 2012
புதுடெல்லி:சிறுபான்மையினருக்கு தற்போதைய இடஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் தனது உரையில் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. கூட்டத்தை தொடங்கிவைத்து, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையாற்றினார்.
குடியரசு தலைவரின் உரையின் முக்கிய அம்சங்கள்:
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த தேசிய அளவிலான உளவுக் கட்டமைப்பு, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் ஆகியவற்றை அமைப்பது அவசியம்.
நாடு இப்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. இதை எதிர்க்க பன்மைத்தன்மை வாய்ந்த, மதசார்பற்ற, ஜனநாயகமான, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்த அரசு பாடுபடும்.
வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றை போக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த உற்பத்திச் சார்ந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். எரிபொருள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
உலக பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த நிதியாண்டில் அதிகளவில் நாம் சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. மேலும், பல நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. இதன் காரணமாக 2010- 2011 நிதியாண்டில் 8.4 சதவீதம் அளவுக்கு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, இந்த நிதியாண்டில் (2012 -2013) 7 சதவீதமாக குறைந்துவிட்டது. எனினும், இந்தியாவில் நிதி முதலீடுகளில் காணப்படும் ஸ்திரத்தன்மை காரணமாக, நமது அடிப்படை பொருளாதாரம் வலுவாக உள்ளது. குறிப்பாக அதிகளவிலான உள்நாட்டுச் சேமிப்பு, அதிக முதலீடு, மனிதவளம், ஸ்திரமான ஜனநாயக அரசியல் ஆகியவற்றால் பொருளாதாரத்தில் அவ்வளவாகப் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, மிக விரைவில் 8 முதல் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவோம் என்ற நம்பிக்கையுள்ளது.
வரி சீர்திருத்தம்: பொது வரி தவிர்ப்பு விதிமுறை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிறுவன விதிமுறைகளை நேரடி வரி வரையறைக்குள் கொண்டு வரப்படும்.
சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வரி சீர்திருத்தம், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.
நேர்மையான, திறமைமிக்க நிர்வாகத்தை அளிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதற்காக பல்வேறு நடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஊழலை வெளிக்கொண்டு வருவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் மசோதா, வெளிநாடுகளின் பொது அலுவலர்கள், சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிப்பதைத் தடுக்கும் சட்டம், மக்கள் குறைதீர்க்கும் உரிமைச் சட்டம், நீதித்துறை கணக்குத் தணிக்கை மசோதா, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த மசோதா ஆகியவற்றை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையை செயல்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது.
நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, கணக்குத் தணிக்கை உள்ளிட்டவை ஊக்குவிக்கப்படும். இதனால் ஏற்படும் மாற்றத்தால் ஊழலை ஒழிக்க முடியும்.
நீதி வழங்கல் மற்றும் சட்டத்துறை சீர்திருத்தத்துக்கான குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. பொது கொள்முதலுக்கான விரிவான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்முறையை இரும்புக்கரம் கொண்டும், அதே சமயம் மனிதாபிமானத்துடனும் அடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வன்முறையை கைவிட்டு அமைதியை விரும்பும் போராட்ட அமைப்புகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காண அரசு விரும்புகிறது. கோர்க்காலாந்திலும், அசாமிலும் போராட்ட அமைப்புகளுடன் முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
வங்கதேசத்துடன் மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நிலவிய நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இலங்கையில் இடம் பெயர்ந்து வாழும் மக்களை மறுகுடியமர்த்துவதற்கும், மறுவாழ்வுக்கும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா பகுதியில் உள்ள நாடுகளில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஏற்பட இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள நாடுகளின் மக்கள், தேசத்தைக் கட்டமைப்பதில் தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஃபலஸ்தீனத்தின் உரிமைக்கு உறுதியான ஆதரவை அளித்து வருகிறோம்.
பாகிஸ்தானுடன் உள்ள பிரச்னைகளை பேச்சு மூலம் தீர்வு காண்பதையே விரும்புகிறோம். அதே சமயம், தனது நாட்டில் உள்ள பயங்கரவாதக் குழுக்களையும், கட்டமைப்புகளையும் அகற்ற அந்நாட்டு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பேசினார்.
கறுப்புப் பணத்தை ஒழிக்க பினாமி பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டம், பண மோசடி தடுப்புச் சட்டம், கறுப்புப் பணம் உருவாவதைத் தடுப்பதற்கான சட்டம் கொண்டு வருவது தொடர்பாக சிறப்புக் குழுவை அமைத்தல், நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பை அறிய சுதந்திரமான அமைப்பின் மூலம் ஆய்வு நடத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
வெளிநாடுகளில் வருமானவரித் துறை அலுவலக கிளைகளை அமைத்தல், இரட்டிப்பு வரிவிதிப்பை தவிர்ப்பது தொடர்பாக வெளிநாடுகளுடன் ஒப்பந்தம், வரி தொடர்பான விவரங்களைப் பரிமாறிக் கொள்வது தொடர்பான ஒப்பந்தம், சர்வதேச வரிவிதிப்பு நடைமுறைகளை அமல்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் தொடர்பான மசோதாவை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது நில உரிமையாளர்கள் மட்டுமின்றி, நிலத்தைச் சார்ந்து வாழ்க்கை நடத்தும் அனைவருக்கும் உரிய இழப்பீடுகளைத் தர வழிவகை செய்யும் என்றார் பிரதிபா பாட்டீல்.
வரும் ஜூலை மாதம் பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி, நாடாளுமன்றத்தில் இதுவே அவரது கடைசி உரையாகும்.
சிறுபான்மை இடஒதுக்கீடு, இலங்கை தமிழர் பிரச்சனைகள், தெலுங்கானா ஆகிய பிரச்சனைகள் குறித்து குடியரசு தலைவர் ஆற்றிய உரையில் அவையின் முதல் நாளே அமளி ஏற்பட்டது. தெலுங்கானா பிரச்சனையை எழுப்பி ஆந்திராவைச் சார்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் கோஷமிட்டு குடியரசு தலைவரின் உரைக்கு இடையூறூ செய்ய முயன்றனர். அமளியால் அவரது உரை ஐந்து நிமிடங்கள் தடைப்பட்டது.
இலங்கை தமிழர் பிரச்சனையை குறித்து உரைநிகழ்த்துவதை துவங்கும் முன்பே தி.மு.க உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். உரைக்கு பிறகும் இதே கோரிக்கையை முன்வைத்து அ.இ.அ.தி.மு.க எம்.பிக்களும் கோஷமிட்டனர்.
சிறுபான்மை இடஒதுக்கீட்டிற்கு எதிராக சில எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment