9 Jan 2012
பத்தணம்திட்டா(கேரளா):’எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே நன்றி. சத்தியம் ஒரு நாள் வெளிவந்துதான் தீரும். இனி இவ்வாறான அனுபம் யாருக்கும் வரக்கூடாது’ -லவ் ஜிஹாத் என்ற ஊடகங்களின் அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷாவின் வார்த்தைகள்தாம் இவை.
லவ் ஜிஹாத் என்ற வார்த்தை பிரயோகத்தின் பிரச்சாரத்தின் பின்னணியில் தீவிர ஹிந்துத்துவா அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் இணையதளம் ஹிந்து ஜாக்ருதி டாட் காம் செயல்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு கேரள போலீசார் கண்டுபிடித்தனர். இச்செய்தி வெளியானதை தொடர்ந்து வெளிநாட்டில் பணியாற்றிவரும் ஷாஹின்ஷா தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“பத்தணம்திட்டாவில் ப்ரக்கானம் செண்ட் ஜாண்ஸ் கல்லூரியில் நான் எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் பயிலும் இதர சமூகங்களை சார்ந்த மாணவிகளை திருமணம் புரிந்ததால் என்னையும், எனது நண்பர் சிராஜுத்தீன் என்பவரையும் குற்றவாளிகளாக சித்தரித்தனர். 2009 ஆகஸ்ட் மாதம் இச்சம்பவம் நடந்தது.
தொடர்ந்து நடந்த லவ் ஜிஹாத் என்ற வார்த்தை பிரயோகமும், பொய் பிரச்சாரங்களும் எங்கள் இருவரையும் தளரச் செய்தது. நீதிமன்ற தலையீட்டினால் இப்பிரச்சனை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நான் வெளிநாட்டில் வேலை தேடி வந்தேன். இச்சம்பவத்தின் துவக்கத்தின் போதே நான் எல்லா உண்மைகளையும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தேன். அன்று அனைத்து ஊடகங்களும் அவற்றையெல்லாம் வளைத்து திரித்து செய்தி வெளியிட்டன. உண்மை தெளிவான பிறகும் அவற்றை குறித்து விவாதிக்க ஊடகங்கள் தயாராகவில்லை என்பதுதான் கவலையான விஷயமாகும்.
மனோராமா, கேரள கவ்முதி, ஜன்ம பூமி ஆகிய பத்திரிகைகளும், இந்தியா விஷன், கைரளி ஆகிய தொலைக்காட்சி சேனல்களும் எங்களை மோசமாக சித்தரித்தன. எல்லா இடங்களிலும் இரண்டு பெண்கள் என்ற குற்றச்சாட்டே எழுந்தது. ஆனால் இந்தியா விஷன் அதனை நான்கு பெண்கள் என செய்தி வெளியிட்டது. அத்துடன் நான் எம்.பி.ஏ பயின்ற ப்ரக்கானம் செண்ட் ஜாண்ஸ் கல்லூரி நிர்வாகம் என் மீதான வைராக்கியத்தை இச்சம்பவம் மூலம் பழிவாங்க தீர்மானித்தனர்.
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான உரிமைகளை கோரி நடந்த போராட்டத்திற்கு நான் தலைமை தாங்கியிருந்தேன். கல்லூரி மீது தவறு இருப்பதாக உயர்நீதிமன்றமும், பல்கலைக்கழகமும் கண்டுபிடித்தன. கல்லூரியின் மோசடிகளை வெளியே கொண்டுவந்ததற்காக கல்லூரி நிர்வாகம் என்னை பழிவாங்க லவ் ஜிஹாதை ஆயுதமாக்கியது. லவ் ஜிஹாத் குறித்து புலனாய்வு செய்த போலீஸ் அதிகாரியான திருவனந்தபுரம் கன்டோன்மண்ட் துணை கமிஷனர் கோபகுமார் எனது வீட்டிற்கு வந்து என்னை தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்துவிடுவேன் என மிரட்டினார். ஆனால் இவர் என்னை ஒரு முறை கூட விசாரிக்கவில்லை. நான் கூறாத காரியங்களை எல்லாம் இவர் தனது கேஸ் டயரியில் எழுதினார். இதற்கு எதிராக புகார் அளித்தபோதிலும் முந்தைய இடதுசாரி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானும், எனது குடும்பத்தினரும் பல இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. எனது படிப்பு முடங்கியது. எனது நண்பர் சிராஜுத்தீனுக்கு கேரள போக்குவரத்துக் கழகத்தில் வேலை பறிபோனது. இவ்வழக்கை தொடர்ந்து மனம் உடைந்த அவரது தந்தை இறந்துபோனார். பல தினங்களை நீதிமன்றங்களில் செலவழித்தோம்.
“நீங்கள் தீவிரவாதிகள் என்பதால்தானே தாடி வளர்த்துள்ளீர்கள்” என பல வழக்கறிஞர்களும் எங்களிடம் கேள்வி எழுப்பினர்.
ஒரு சமூகத்தை அவமதிப்பதற்காக என்னைப் போன்ற ஒரு சாதாரண நபரை பலிகடாவாக மாற்றினார்கள் என்பது இப்பொழுது நிரூபணமாகியுள்ளது. இனி மேலாவது பொது சமூகமும், ஊடகங்களும் இத்தகைய பிரச்சாரங்களில் உண்மையை அடையாளம் காண முயலவேண்டும்.
இவ்வாறு ஷாஹின்ஷா கூறினார்.
thanks
www.thoothuonline.com
No comments:
Post a Comment