சிப்பாய்கள் பெற்ற உத்வேகம், ஒரு பிடி மண்
சிப்பாய்கள் பெற்ற உத்வேகம்
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவது 1857 -இல் நடந்த சிப்பாய் கலகம் ஆகும்.
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியப் போக்குகளுக்குத் துணை போகிறோமே என்ற அதிருப்தியுடன் பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றிய ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு. பிரிட்டீஷாருக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் உத்வேகத்தைக் கொடுத்ததே ஓர் இஸ்லாமிய நாடு சந்தித்த போர்தான்.
நெப்போலியனையே கடற்ப்போரில் தோற்கடித்த ஆங்கிலப் படை முதன் முதலாக ஆப்கானிஸ்தானுடன் நடந்த போரில்தான் தோல்வியைச் சந்தித்தனர். 50 கோடி ரூபாய் செலவு செய்து, 20 ஆயிரம் போர் வீரர்களை இழந்த ஆங்கிலேயரின் அத்தோல்வி, இந்திய சிப்பாய்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. ஆங்கிலேயர் வெல்ல முடியாதவர்கள் அல்ல. அவர்களையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இந்திய சிப்பாய்களுக்குப் பிறந்தது.
ஆங்கிலேயரை வென்று துரத்த முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது ஓர் இஸ்லாமிய நாடு என்றால், அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதற்கான சூழலை உருவாக்கியது ஓர் இஸ்லாமிய மார்க்க நெறி ஆகும். 1856-இல் இந்திய ராணுவத்தில் புதிய என்ஃபீல்டு துப்பாக்கியைப் பிரிட்டீஷார் அறிமுகம் செய்தனர். ஆத்துப்பாக்கியில் அடைக்கப்பட்ட தோட்டாக்கள் எளிதாக வெளியேறுவதற்காக பன்றிக் கொழுப்பும் பசுக்கொழுப்பும் அத்தோட்டாக்களில் தடவப்பட்டது. தோட்டாக்கள் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பின், அத்தோட்டாக்களைப் பொதிந்திருந்த மேலுறைத் தகடுகளைப் பல்லால் கடித்து இழுத்துதான் வெளியில் எறிய வேண்டும். அப்போது அதில் தடவப்பட்டிருந்த பன்றி – பசுக் கொழுப்பு வாயில்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
இஸ்லாமியருக்கு பன்றிக் கொழுப்பு விலக்கப்பட்ட(ஹராம்)உணவு ஆகும். பிராமணர்களும் பிற சைவர்களும் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். எனவே தங்கள் வாயில் பன்றி – பசுக்கொழுப்பு படுவதை இருசாரரும் வெறுத்தனர். கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் அடைக்கப்பட்ட என்ஃபீல்டு துப்பாக்கிகளை முதன் முதலாக வங்காளத்தில் முகாமிட்டிருந்த 19-வது படைப்பிரிவில் பயன்படுத்தி பரிசோதிக்க ஆங்கில அரசு தீர்மானித்தது. அந்த நேரத்தில் வங்காளம் பராக்பூரில் முகாமிட்டிருந்த 34-வது படைப்பிரிவு புரட்சியை ஆரம்பிக்கத் துடித்துக் கொண்டிருந்தது இப்படைப் பிரிவிலுள்ள இந்திய சிப்பாய்களுக்கு கல்கத்தாவின் அருகில் தங்கியிருந்த அலி நத்ஹிகான் என்ற இஸ்லாமிய ஆட்சியாளர்தான் ஆதரவும் தூண்டுதலும் அளித்து வந்தார்.*
இந்த நேரத்தில் ராணுவ முகாம்களுக்குள் இருந்த இந்திய வீரர்களிடம் பிரிட்டீஷாருக்கு எதிரான போராட்ட உத்வேகத்தைத் தங்கள் ரகசியப் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம் பக்கீர்கள் ஏற்படுத்தினார்ககள். ஆயிரக்கணக்கான பக்கீர்கள் பல இடங்களுக்கும் சென்ற சிப்பாய்கள் மனதில் விடுதலைத்தீயை மூட்டினர். ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து வீரர்களிடம் பிரச்சாரம் செய்தனர்.** (* வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.85) (** மேற்படி., பக்கம்.63)
மக்கள் மத்தியிலும் பிரச்சாரங்கள் மூலம் இப்பக்கீர்கள் சுதந்திர எழுச்சியை ஊட்டினர். இதனை வீரசாவர்க்கர், 1857-இல்…தேசயாத்திரை செய்வதாக கூறிவந்த சன்னியாசிகளும் பக்கிரிகளும் மௌலவிகளும் பண்டிதர்களும் ஒவ்வொரிடத்திலும் ரகசியமாக ஜனங்களுக்கு சுதந்திர யுத்தத்தைப் பற்றி போதித்துச் சென்றனர். அவ்வாறாக புரட்சித்தீ எங்கும் பரவுவதற்கான உறைகள் வெகு சுதந்திரமாக் கைக்கொள்ளப்பட்டன.
அந்தப் போதகர்கள் (மௌல்விகள்) ஒவ்வொரு நகரத்திற்கும் கிராமத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகையில், அவர்களுக்குப்பின் ஏராளமான தொண்டர்கள் பிச்சைக்காரர்கள் (பக்கீர்கள்) போல் வேசம் போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ச் சென்று தீவரப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் பிச்சை எடுப்பவர்களாக வீட்டுக்கு வீடு சென்று ஜனங்களின் ஹிருதயத்தில் சுதந்திர உணர்ச்சியையும் தேச பக்தியையும் குமுறி எழும்படி செய்தார்கள்*. -என்று வியந்து தன் நூலில் வடித்துள்ளார்.
பெர்ஹாம்பூர், மீரட் ராணுவ முகாம்களில் இருந்த ஏராளமான இஸ்லாமிய வீரர்கள் பிறசமய வீரர்களுடன் இணைந்து என்ஃபீல்டு துப்பாக்கிகளைத் தொடமாட்டோம் என்று கலகம் செய்தனர். (* மேற்படி, பக்கம். 63-64)
அவ்வாறு எதிர்த்தவர்கள் விலங்கிடப்பட்டு, ராணுவ உடைகள் கிழித்தெறியப் பட்டு மக்கள் முன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். அவமானப்பட்ட குதிரைப்படை வீரர்கள் சிறைகளை உடைத்துக் கைதிகளை விடுவித்துக்கொண்டு வெளியேறினர்.அப்போது கர்னல் பின்னஸ் போன்ற அதிகாரிகளையும், ஏராளமான பிரிட்டீஷாரையும் கொலை செய்து, அவர்களது வீட்டுக்கு தீயிட்டனர்.
அந்நிய ஆட்சி வீழ்க! பேரரசர் பகதுர்ஷா வாழ்க! – என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.*
இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம்! டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார்.** நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ!’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.
கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.
(* ஏ.என். முகம்மது யூசுப், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், பக்கம்.10)
(** B.L.Grover, S.Grover, A New Look at Modern Indian History, P665)
பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது. அதில் கைதான – கொல்லப்பட்ட – தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.
வட இந்தியாவில் அப்புரட்சியின் பாலமாக முஸ்லிம்கள் இருந்ததால், முஸ்லிம்களை விடக்கூடாது என்று முடிவு செய்த ஆங்கிலேயர், கலகத்தை ஒடுக்குதல் என்ற போர்வையில் முஸ்லிம்களை சகல நிலைகளிலும் இழப்புக்குரியவர்களாக்கினர். முஸ்லிம்களைப் பொருளாதாரத்தில் வீழ்த்தி விட்டால் அவர்களது ஆங்கில எதிர்ப்பு குறையும் என்ற திட்டத்துடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்த்தும் நடவடிக்கையில் பிரிட்டீஷார் இறங்கினர்.
1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டு வெள்யேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். 1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.- திவான் இந்திய விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், பக்கம்,57.
இஸ்லாமியர் நடத்திய அரசுகள் – அதன் கஜானாக்கள் அபகரிக்கப்பட்டன. இஸ்லாமிய செல்வந்தார்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் உடைமைகளை இழந்தனர் இன்று தென்னிந்திய முஸ்லிம்களை விட வட இந்திய முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இதுதான் காரணமாகும். இதில் தப்பிப் பிழைத்த ஒரு சில செல்வந்தர்கள் இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டனர். அதனால் தான் இன்று சாலை ஓரத் தொழிலாளிகளாக – கூலிகளாக – ரிக்ஷா ஓட்டுபவர்களாக வட இந்திய முஸ்லிம்களை நாம் காண்கின்றோம்
இஸ்லாமியரின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு இந்திய மண்ணில் அவர்களது வாழ்க்கைத் தரத்தையே மாற்றி அமைத்தது. இது பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர வேண்டும். அது காலத்தின் தேவை.
ஏனென்றால் இன்றும் இஸ்லாமியரின் வளர்ச்சியை இம்மண்ணில் தடுக்க, அவர்களைப் பொருளாதரத்தில் வீழ்த்துவது என்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் சக்திகள் உள்ளன. அவர்களது நோக்கம் கோவை போன்ற இடங்களில் நிறைவேறி வந்துள்ளதையும் காணலாம்.
இவ்வாறு இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போரான சிப்பாய் கலகம் உருவாக உத்வேகம் அளித்தவர்கள் – அக்கலகத்தை தங்கள் பிரச்சாரங்கள் மூலம் சுதந்திரப் போராட்டமாக மாற்றியவர்கள் – அப்போராட்டத்தில் இழப்புகளுக்கு ஆளானவர்கள் பெரும்பான்மை முஸ்லிம்களே என்பது வீரசாவர்க்கர் போன்றோர் தரும் வாக்கு மூல உண்மையாகும்.
ஒரு பிடி மண்
பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காக ராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர். இந்தச் சூழலில் தான் 1837 -இல்-பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏரினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல.
1847 – இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து – முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும்.-என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து – முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தை வடித்துள்ளான்.
இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, “ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டும் மாடுகளை வெட்டக்கூடாது” – என்று பிரகடனப் படுத்துகிறார். நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில், “என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்” – என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.
பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரிய திட்டம் உருவானது.
இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிட நம்மால் முடியும்.அவனை முடித்து உய்pரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்பட்டுள்ள அபாயங்களிலிருந்து காப்போம்.- என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.*
தேசத்தின சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு – போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.
… ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும் என்றும், இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தனர்.**
(* காஸிம் ரிஸ்வி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகதுர்ஷா ஜஃபர் பக்கம், 7., ** வீரசாவர்க்கர்,எரிமலை. பக்கம்,58.)
இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா – ராஜஸ்தான் – மகாராஷ்டிரா மன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக – ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.
…ஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான் உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 99.
ஆனால் மே 10-ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது. இதனால் பகதுர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும் கூட்டாகவும் சிப்பாய் கலக காலகட்டத்தில் பிரிட்டீஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமைiயாக இறங்கினர்.
தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பகதுர்ஷா தலைமையில் சுதந்திர இந்தியாயை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல.
மாமன்னர் பகதுர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். ஒரு நாள் காலை… காலை உணவு பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு எடுத்து வரப்படுகிறது. உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு.
ஹட்ஸன்: பகதுர்ஷா… நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை! (என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான். அங்கே… பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள்! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளை வெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு… இது பிரிட்டீஷ் கம்பென்யாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன். திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து…)
பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்! (கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷா கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு …
ஹட்ஸன்: உமது கண்களில் என்ன… நீர் வற்றி விட்டதா?
பகதுர்ஷா: ஹட்ஸன் … அரசர்கள் அழுவதில்லை! (என்று பெருமிதத்துடன் கூற… தலை குனிந்த வாறு வெளியேறுகிறான் ஹட்ஸன்)*
அன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த முகங்கள்… உடம்பிலிருந்து துண்டாய்! பெற்ற மனங்கள் எப்படி பதறி இருக்கும். அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பகதுர்ஷா கலங்கவில்லை.
* Kasim Rizwi, The Great Bahadur Sha Jaffer, P.10.
சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது. மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது. “என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்.” – என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
கேப்டன் ஹாட்ஸன், பகதுர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு முன் கழுகளுக்கு இரையாகும்படி எடுத்தெரியப்பட்டன. அவை வெகுநேரம் வரை கழுகளுக்கு ஆகாரமான பின்னர் தான் ஆற்றில் இழுத்தெரியப்பட்டன.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 296-297.
தாய் மண்ணில் இனி சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம் செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார். 1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார். பகதுர்ஷா சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து,* அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக, நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்! – என்று சபதமேற்றார். இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே … ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர்.
(* அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)
தொடரும்…
நன்றி
சித்தார்கோட்டை
No comments:
Post a Comment