ஒருமாலை நேரம். சில இளைஞர்கள் குதிரை ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் கவர்னரின் மகனும் உண்டு. பந்தயத்தில் முதலில் வரும் குதிரை தன்னுடையது என்றெண்ணிய அவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.
ஆனால் சில மணித்துளிகளில் உண்மை விளங்கிற்று. ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றது தன் குதிரையல்ல. பட்டணத்தில் வசிக்கும் ஒரு சாதாரண இளைஞன்தான் வெற்றி பெற்றது. கவர்னரின் மகன் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைக்க மிகவும் சிரமப்பட்டான். எல்லோரும் தன்னை ஏகடியம் செய்வதுபோலிருந்தது.
அந்த இளைஞன் மீது கோபம் கோபமாக வந்தது. “கண்ணியமிக்க மக்களுடன்தான் நீ போட்டியிடுவாயா?” என்று எரிந்து விழுந்தான். அந்த அப்பாவி இளைஞன் செய்வதறியாது திகைத்து நின்றான். இதனையறிந்தகவர்னரும் எரிச்சலடைந்தார். அந்த இளைஞன் மீது பொய்க் குற்றம் சுமத்தி சிறையிலடைத்தார்.
சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த அந்த இளைஞனுக்குப் பொறுக்கவில்லை. பொங்கியெழுந்தான். நேரே மதீனா வந்தடைந்தான். நீதியின் சாட்சியாகத் திகழ்ந்த இரண்டாவது கலீஃபா உமர்(ரலி) அவர்களிடம் புகார் அளித்தான்.
கவர்னரையும், மகனையும் மதீனாவுக்கு வரவழைத்தார் கலீஃபா. இளைஞன் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்தார். அந்த இளைஞனுக்கு அநீதி இழைக்கப்பட்டதை அறிந்துணர்ந்தார். இனிவரும் நிகழ்வுதான் வரலாற்றேடுகளில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.
அநியாயமாக சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட அந்த இளைஞனின் கையில் சாட்டையைக் கொடுத்த கலீஃபா இவ்வாறு கூறினார்: “அடி, கண்ணியமானவரின் மகனை அடி.”
அந்த இளைஞன் அடிக்க ஆரம்பித்தான். அந்த அநீதி மனதில் ஏற்படுத்திய பாரம் இறங்கும் வரை அடித்தான்.
“கண்ணியமானவரின் மகனை அடி” என்று கலீஃபா இடைக்கிடை கூறிக்கொண்டே இருந்தார்கள். அந்த இளைஞன் அடித்து ஓய்ந்த பொழுது நடந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திற்று.
கலீஃபா கவர்னரைச் சுட்டிக்காட்டி, “இனி இவரை அடி” என்றார்கள். இளைஞன் விக்கித்து நின்றான்.”இவரை அடி. இவரது அதிகாரம்தான் இவரின் மகனை மதி கெட வைத்தது.”