பாலிவுட்டின் பரிசு!
2 May 2012
பாலிவுட் திரைப்படங்களை தொடர்ந்து பார்க்கும் இளைஞர்களுக்கு மதுபான பழக்கம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
12-16 வயது இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.59 பிரபல பாலிவுட் திரைப்படங்களை பார்த்த 3956 மாணவர்களை குழுவாக பிரித்து கண்காணித்த பொழுது மிக அதிகமாக மதுபானம் குடிக்கும் காட்சிகளை கொண்ட திரைப்படங்களை பார்த்தவர்கள் இதர திரைப்படங்களை பார்த்தவர்களை விட அதிக மதுபான பழக்கம் இருப்பது தெரியவந்தது. பாலிவுட் திரைப்படங்களில் வரும் மதுபான காட்சிகள் மாணவர்களிடம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு தெரிவிப்பதாக துபாயில் நடந்த இதயநோய் குறித்த சர்வதேச மாநாட்டில் டாக்டர் ஜி.பி.நாஸிர் சுட்டிக்காட்டினார்.
கோடிகளை செலவழித்து மதுபானமும், ஆபாசங்களும், சண்டைக் காட்சிகளும், கடத்தல் காட்சிகளும், கொலைகளும் அடங்கிய காட்சிகளை திணித்து சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் பாலிவுட் திரைப்படங்களை இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாகவும், டாலர்களை பெருக்கும் வர்த்தகமாகவும் கொண்டாடுகின்றனர்.
சென்னையில் அண்மையில் பள்ளிக்கூட ஆசிரியையை வகுப்பறையில் வைத்துக் கொலைச் செய்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒரு பிரபல இந்தி நடிகர் நடித்த பாலிவுட் திரைப்படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு இக்கொலையைச் செய்ததாக வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிப்பாற்றலுக்கு வழங்கப்படும் தேசிய விருது கூட இவ்வாண்டு மிகவும் மோசமாக ஆபாசமான காட்சிகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட ‘டேர்டி பிக்சரில்’ நடித்த பாலிவுட் நடிகைக்கு வழங்கப்பட்டது சான்றோர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்தியாவில் சில பிரபல பத்திரிகைகளும், இதழ்களும், பொழுதுபோக்கு சேனல்களும் தங்களது வருமானத்திற்கு பாலிவுட்டை நம்பியே உள்ளன. சேனல்களின் இடம்பெறும் காட்சிகள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் குடிசைகள் வரை பிடித்து ஆட்டும் வேளையில் குழந்தைகளும், இளைஞர்களும் திரைப்படங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து தப்புவது கடினமாக மாறியுள்ளது.
கனவு தொழிற்சாலையான திரைப்படங்களில் தங்களது விருப்பமான நடிகர்கள் மதுபானம் அருந்துவதையும், வன்முறைகளில் ஈடுபடுவதையும், பாலியல் சேட்டைகள் புரிவதையும் பார்த்துவிட்டு அதனையே தங்களது வாழ்க்கையிலும் முன்மாதிரியாக கொண்டு ஒரு புதிய இளைய சமூகம் வளர்ந்துவருகிறது.
சொந்த சாம்ராஜ்ஜியங்களை கட்டியெழுப்புவதற்காக க்ரைம் மாஃபியாக்களும், நிழலுக தாதாக்களும், ஹோட்டல் அதிபர்களும் பெருந்தொகையை பாலிவுட்டில் முதலீடு செய்கின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகையொருவர் கர்ப்பம் அடைந்ததில் இருந்து அவர் பிரசவிக்கும் வரை மீடியாக்கள் அவர் பின்னாலேயே சுற்றி திரிந்தன. பாலிவுட் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்திகளில் ஒருவர் அமெரிக்கா விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனைக்காக 2 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்ட செய்தி சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக மாறியது.
அன்றாடம் முஸ்லிம்கள் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சந்தேக கண்ணோடு பார்க்கப்பட்டு துயரங்களை நேரிடுவதை ஏறெடுத்துப்பார்க்க எந்த மீடியாவும் தயாராவதில்லை.
பாலிவுட்டிற்கு ஏதேனும் இடர் என்றவுடன் பதட்டமடையும் அரசியல்வாதிகளும், மத்திய தரவர்க்கமும் மதுபானம், முறைகேடான உறவுகள், வன்முறை சிந்தனைகள் ஆகியவற்றை வளர்த்து எதிர்கால இளைய தலைமுறையை குற்ற பரம்பரையாக பாலிவுட் மாற்றுவது குறித்து கவலைப்படுவதில்லை. ஏன் எதிர்ப்பதோ கண்டிப்பதோ கூட இல்லை. தலைகீழான இந்த நீதியைக் குறித்து சொல்வதற்கு என்ன இருக்கிறது?
குறிப்பு:பாலிவுட் மட்டுமல்ல, டோலி உட்டும், கோலிவுட்டும், மல்லு உட்டும் இதில் அடங்கும். விளைவுகளில் வேண்டுமானால் சில வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!
No comments:
Post a Comment