கொன்றவர்களுக்கு தெரியும், அவர் நிஜமாக யார் என்பது!
மியூனிக், ஜேர்மனி: கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட ஈரானிய விஞ்ஞானியை இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தான் சுட்டது என்ற ரகசியம் கசிந்துள்ளது. இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, ஜேர்மன் வாரப் பத்திரிகை Der Spiegel இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது.
“மொசாத்துக்கு புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள தாமிர் பார்டோவின் முதலாவது கொலை ஆபரேஷன் இது” என்றும் ஜேர்மன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. தமக்குத் தகவல் கொடுத்த உளவுத்துறை அதிகாரியின் பெயரை பத்திரிகை வெளியிட மறுத்துள்ளது.
ரகசியம் வெளியானதால் மொசாத்தும், இஸ்ரேலிய அரசும் கடும் சங்கடத்தில் சிக்கியுள்ளன.
சுட்டுக் கொல்லப்பட்ட ஈரானிய விஞ்ஞானியின் பெயர், டரியோஷ் ரெஸ்யினிஜட். இவர் தனது மனைவியுடன் தமது குழந்தையின் பாடசாலை வாயிலில் காத்திருந்தபோது, சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர், மொசாத்தின் உளவாளிகளில் ஒருவர் என்கிறது ஜேர்மன் பத்திரிகை.
ஈரானியப் பத்திரிகைகள் இவரது கொலைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அவர்களது ஆரம்பச் செய்திகளில் இவர் ஒரு ஈரானிய அணு விஞ்ஞானி என்ற (உண்மையான) விபரம் வெளியாகியிருந்தது.
ஆனால் மறுநாளே கதை மாறிவிட்டிருந்தது. அவர் ஒரு விஞ்ஞானியல்ல என்று சொல்லி வைத்தாற்போல அனைத்து ஊடகங்களும் மறுப்பு தெரிவித்திருந்தன. “காஜா நசிரிடின் பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக் துறையில் கல்வி பயிலும் ஒரு மாணவர் அவர்” என்பதாக கதை மாற்றமடைந்தது.
சாதாரண மாணவர் ஒருவரின் மரணத்துக்கு ஈரானிலுள்ள அனைத்து ஊடகங்களும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தன என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
கொல்லப்பட்ட டரியோஷ் ரெஸ்யினிஜட், உண்மையிலேயே ஒரு அணு விஞ்ஞானிதான் என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள். இவரை ஒரு விஞ்ஞானி என்று ஒப்புக் கொள்வதில் ஈரானிய அரசுக்கு சில சங்கடங்கள் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய அதிகாரிகள் சிலர், இந்தக் கொலையின் பின்னணியில் அமெரிக்க உளவுத்துறையும் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக சியாட்டில் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதை அமெரிக்க அரசு மறுத்துள்ளது.
ஆனால், இஸ்ரேலிய அரசோ, மொசாத்தோ இதுபற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சு, “ஈரான் தமது அணு ஆயுதத் தயாரிப்புக் குற்றங்களை மறைப்பதற்காகவே, இப்படியான திசை திருப்பல்களைச் செய்கின்றது. கொல்லப்பட்டவர் ஒரு அணு விஞ்ஞானியாக இருக்கலாம். ஆனால், அவரது கொலைக்கும் அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது” என்று தெரிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் நீண்ட காலமாகவே குற்றம்சாட்டி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டை ஈரானும் அவ்வப்போது மறுத்து வருகின்றது. அது உண்மையோ, இல்லையோ, ஈரானிய விஞ்ஞானிகள் மர்மமான முறையில் அவ்வப்போது கொல்லப்படுவதும் நடக்கின்றது.
கடந்த 2009 டிசெம்பரில், மசூத் அலி மொஹாமபடி என்ற விஞ்ஞானி கொல்லப்பட்டிருந்தார். இவர் டெஹ்ரானிலுள்ள தனது வீட்டுக்குமுன் காற்று வாங்குவதற்காக நின்றிருந்தபோது, அடையாளம் காணப்படாத நபர் ஒருவரால் சுடப்பட்டு இறந்தார்.
அது நடைபெற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் கடந்த ஆண்டு, மஜீத் ஷாரியாரி, அபாசி தவானி என்ற இரு விஞ்ஞானிகள் சுடப்பட்டனர். இவர்களில் மஜீத் ஷாரியாரி மாத்திரம் உயிரிழந்தார். மற்றையவர் தப்பிவிட்டார்.
உளவுத்துறை வட்டாரங்களில், மொசாத் இந்தக் கொலைகளைச் செய்வது நன்று திட்டமிடப்பட்ட புரோகிராம் ஒன்றில்தான் என்கின்றன. ஈரானிய அணுஆயுதத் தயாரிப்பு முயற்சியை அரசியல் ரீதியாக யாராலும் தடுக்க முடியவில்லை. அப்படியான நிலையில் அணுஆயுதத் தயாரிப்பை காலதாமதம் செய்வதற்கு உள்ள ஒரே வழி, அந்தத் திட்டத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு, ஒவ்வொருவராகக் கொல்வதுதான் என்கிறார்கள் உளவு வட்டாரங்களில்.
கொல்லப்படும் நபர்களை அணு விஞ்ஞானிகளாக அடையாளம் காட்டுவதில்லை ஈரான். முன்பு கொல்லப்பட்ட இருவரையும், ஈரானிய பல்கலைக்கழகம் ஒன்றின் பௌதீக பேராசிரியர்கள் என்று கூறியிருந்தது ஈரானிய அரசு. கடந்த வாரம் கொல்லப்பட்டவரை மாணவர் என்கின்றன ஈரானியப் பத்திரிகைகள்.
ஆனால் அவர்கள் யார் என்ற விஷயம், அவர்களைச் சுட்டவர்களுக்குத் தெரிந்திருக்கிறதே!
நன்றி
விறுவிறுப்பு
No comments:
Post a Comment